"யம்மா.. கீரையன்பாளையம் வரப்போகுது. பைய எடுத்துக்கிட்டு இறங்கம்மா" கண்டக்டர் குரல் கொடுக்க மேகலை பையை இறுக அணைத்தபடி எழுந்தாள்.
அவள் மட்டும் இறங்கியபோது மேகக்கூட்டங்கள் புகையாக மூடிக்கொண்டன. ஊரென்ன ஊர் ! இரண்டு தெரு.. நாலு கடை. ஒரு போஸ்ட் ஆபீஸ்.. முப்பது நாற்பது வீடு. அவ்வளவுதான். எல்லோருக்குமே இந்த மேகக்கூட்டத்தின் நடுவில் நடமாட பழக்கம் உண்டு.
.......................................
கண்ணாடி போட்ட நர்ஸம்மாவிடம் போனபோது அவள் இரண்டு பேப்பரில் கையெழுத்து போட சொன்னாள். "குழந்தை உடம்பை இங்கேயே அடக்கம் செய்ய ஒரு அமைப்பு உதவி செய்யுதும்மா" என்றாள்.
"இல்லீங்க.. எங்க வூட்டுக்காரருக்கு கால் நடக்க ஏலாது. அவரு குழந்தையப் பாக்க ஆசைப்படுவாருங்க."
"அவர வந்து பாக்க சொல்லும்மா"
"இல்லீங்கம்மா. நாங்க இருக்கறது மலை மேல. அங்கிருந்து வர்ரது சிரமம்"
நர்ஸம்மாவுக்கு பொறுமை இல்லை. "அப்படியின்னா பாடியை வாங்கிக்கிட்டு போ" என்றபடி நகர்ந்தாள்.
அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் அடக்கம் செய்ய உதவத் தயாராக இருந்தார்களே தவிர குழந்தையின் முகத்தைக் கடைசியாக அதன் தகப்பன் பார்ப்பதற்கு உதவத் தயாராக இல்லை.
பிணத்தை எடுத்துச் செல்ல வண்டிக்காரர்கள் கேட்ட தொகை அவள் வாழ்நாள் முழுவதும் சம்பாதிக்க முடியாதது. மேகலை தீர்மானித்தாள்.
...............................
மேகத்திரை விலகியபோது சரிந்த பாதையில் கம்பை ஊன்றிக் கொண்டு பஸ் சத்தம் கேட்டதால் மேகலை வருவாளோ என்ற சந்தேகத்தில் மதிவாணன் வந்து கொண்டு இருந்தான்.
"மேகலை.. மேகலை.. கொழந்த எப்படி இருக்குது ? நல்லா இருக்குதா ? அது முகத்தைப் பாத்து ஒரு மாசம் ஆச்சு"
மேகலை வெறித்தபடி கையில் அணைத்து வைத்திருந்த பையை இறக்கினாள். அதன் முடிச்சை அவிழ்த்து மேலாக இருந்த துணியை எடுத்தாள்.
"பாருங்க.. ஒங்க மகன் மொகத்த நல்லா பாருங்க"
நழுவிய பைக்குள் இருந்து ஒரு பிஞ்சு முகமும், அதன் மூடிய விழிகளும் தெரிய சுமையை இறக்கி வைத்த மேகலை, மதிவாணனின் மீது சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
***************************************
1 comment:
Heart touching one...
Post a Comment