Wednesday, May 28, 2008

சுமை - 3

என்னவோ புதையலை காக்குற பூதம் போல வழிய வுடாம பைய வச்சுகிட்டு அடைக்கிறாளுங்க.. என்ன சன்மங்களோ?" டேஞ்சர் லைட் பொட்டு வைத்த பெரியம்மா நகர.. மேகலைக்கு அருகில் ஒரு இளம்பெண் உட்கார்ந்து கொண்டாள். மேகலையின் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு அவள் மீது பட்டால் அழுக்கு ஒட்டிக் கொள்ளுமோ என்று நினைப்பவள் போல நாசூக்காக நகர்ந்து அமர்ந்து கொண்டாள்.

மேகலை எதையும் கவனிக்கவில்லை. பையை இறுக அணைத்துப் பிடித்தபடி சாலையின் ஓரத்தில் தெரிந்த பலகைகளில் எழுதியிருந்ததை மனதுக்குள் எழுத்துக் கூட்டிப் படித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். "கீரையன் பாளையம் 6 கி.மீ"

அவள் மனது ஒரு மாதத்துக்கு முன்னால் போனது. வைத்தியர் அப்போதைக்கு மருந்து கொடுத்து விட்டு குழந்தையை பொள்ளாச்சி பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய்க் காட்டி விட்டு வரச் சொன்னார். குழந்தைக்கு மருந்து வாங்கிக் கொண்டு அவள் திரும்பியபோது அவசரமாக எழுந்து அவள் பின்னாலேயே வந்த மதிவாணன் கம்பை ஊன்ற முடியாமல் விழுந்து உருண்டு அடி பட்டிருந்தான். தபால் ஆபீஸ் தாத்தா என்று அழைக்கப்பட்ட போஸ்ட் மாஸ்டர் உதவி செய்ய மதியை வீட்டில் விட்டு விட்டு, குழந்தையுடன் பொள்ளாச்சி ஆஸ்பத்திரிக்குப் போனாள்.

அவள் நல்ல நேரம், அப்போது அங்கே ஒரு பெரிய மருத்துவர்களின் மாநாடு நடப்பதாக இருந்ததால், இலவச சிகிச்சை மையம் என்று ஒன்றை ஆரம்பித்து இருந்தார்கள். குழந்தையை அட்மிட் செய்யச் சொன்னார்கள். குழந்தைக்கு ஏதோ கொடுமையான நோய் என்று சொன்னார்கள். இலவசமாக மருத்துவம் செய்வதாகச் சொல்லி பத்திரிக்கைக்காரர்களை எல்லாம் கூட கூட்டி வந்து பேசினார்கள். அவளுக்கு எதுவும் புரியவில்லை. அன்றிலிருந்து அவள் தினசரி வாழ்வு ஆஸ்பத்திரியில் தொடங்கி அங்கேயே முடிந்தது.

நடுவில் ஊருக்கு வந்தபோது அவள் அப்பாவும், சின்னம்மாவும் கடன் தொல்லை தாங்க முடியாமல் ஊரை விட்டு ஓடிவிட்டதாக செய்தி வந்திருந்தது. வீட்டை விட்டு வெளியே வராமல் தினமும் ஒரு வேளைக் கஞ்சியில் தன் வாழ்வை ஓட்டிக் கொண்டிருந்தான் மதிவாணன்.

"மேகலை.. என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம் ? குழந்தையை ஒரு தடவை பாக்கணும் மேகலை.. நான் அது முகத்தை பார்த்து ரெண்டு வாரமாச்சு. இப்போ எப்படி இருக்குது?"

"நானே சரியாப் பாக்கலீங்க. ஒடம்பெல்லாம் ஊசி குத்தி கண்ணாடி கூண்டுக்குள்ள வச்சிருக்காங்க.இன்னும் ரெண்டு வாரத்துல சரியாயிடும். அழைச்சுகிட்டு வந்துடறேன். செடிய மட்டும் கொஞ்சம் பாத்துக்குங்க"

ஆனால் இன்று காலையில் கதை மாறிப் போனது. கண்ணாடிக் கூண்டில் இருந்த குழந்தையைப் பார்க்க அவளை அழைத்தபோது அவள் அடிவயிறு கலங்கியது. குழந்தையில் மேலிருந்த குழாய்கள் எல்லாம் எடுக்கப்பட்டிருக்க, கதவிடுக்கில் நசுங்கிய பல்லியின் எலும்புக்கூடு போல குழந்தையின் உடல் இருந்தது.

"ராசா.. என் மவனே"

"அழக்கூடாதம்மா. நாங்க எல்லா வைத்தியமும் செஞ்சுட்டோம். என்ன செய்யுறது ? நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான். இங்கேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செஞ்சு தரோம். அந்த கண்ணாடி போட்ட நர்ஸம்மா விவரம் சொல்லுவாங்க கேட்டுக்க"

மேகலையின் கண்ணில் கண்ணீர் வற்றிப் போயிருந்தது.

No comments: