திவ்ய தேசங்கள் - விளக்கம்
பனிரெண்டு ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் எந்த திவ்யதேசத்தையும் மங்களாசாசனம் செய்யவில்லை. "வேதம் தமிழ் செய்த மாறன்" எனும் நம்மாழ்வாரிடம் கொண்ட பக்தியல்லாது "வேறொன்றும் நானறியேன்" என்றார். பகவத் சேவையிலும் உயர்ந்த பாகவத சேவை புரிந்து அவரும் ஆழ்வார்களுள் ஒருவரானார்.
அவரை விடுத்து மீதமுள்ள பதினொரு ஆழ்வார்களும் திவ்யதேசங்களை கீழே கண்டுள்ளபடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.
1. பொய்கையாழ்வார் - 6
2. பூதத்தாழ்வார் - 13
3. பேயாழ்வார் - 15
4. திருமழிசையாழ்வார் - 17
5. நம்மாழ்வார் - 37
6. குலசேகராழ்வார் - 9
7. பெரியாழ்வார் - 18
8. ஸ்ரீஆண்டாள் - 11
9. தொண்டரடிப்பொடியாழ்வார் - 1
10. திருப்பாணாழ்வார் - 3
11. திருமங்கையாழ்வார் - 86
இவற்றில் சில தலங்கள் பல ஆழ்வார்களின் பாடல் பெற்ற பெருமையுடன் விளங்குகின்றன. வேறு சில தலங்களோ இனிப்புப் பலகாரத்தில் சுவை கூட்டும் முந்திரிப் பருப்பு போல ஒரே பாடலுக்குள் அமர்ந்து பொலிகின்றன.
ஆழ்வார்கள் மங்களாசாசனம் பெற்ற தலங்கள்
11 1 ( ஸ்ரீரங்கம் )
10 2 ( திருமலை, திருப்பாற்கடல்)
9 ----------
8 1 ( திருப்பரமபதம்)
7 1 ( திருக்குடந்தை )
6 1 ( திருமாலிருஞ்சோலை )
5 6
4 3
3 5
2 21
1 67
மொத்தம் 108. இவற்றில் கிடந்து, இருந்து, நின்று என மூவகைத் திருக்கோலங்களில் திருமால் காட்சி தருகிறார்.
கிடந்த திருக்கோலம் சயனத்திருக்கோலம் என்று அழைக்கப்படும். இவை
பத்து வகைப்படும்
1. ஜல சயனம்
2. தல சயனம்
3. புஜங்க சயனம் அல்லது சேஷ சயனம்
4. வீர சயனம்
5. போக சயனம்
6. உத்தியோக சயனம்
7. தர்ப்ப சயனம்
8. பத்ர சயனம் ( பத்ரம் என்றால் இலை என்று பொருள் )
9. மாணிக்க சயனம்
10. உத்தான சயனம்
தல விளக்கத்தின்போது அந்தந்தத் தலங்களின் சயன வகை பற்றிக் காண்போம்.
திருக்கோட்டியூர், கூடலழகர், திரு நீர்மலை, திருவல்லிக்கேணி ஆகிய தலங்களில் ஒரே ஆலயத்தில் நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களைக் கண்டு அருள் பெறலாம்.
( தொடருவோம் )




