ஒரு கவிதையின் பயணம்
அடுப்பில் குக்கரை வைத்து விட்டு சங்கர் ஹாலுக்குப் போய் CD ப்ளேயரை ஓட விட்டான். சிட்டிபாபுவின் சிவலீலாதார்ணவம் மெதுவாக தடவிச் செல்லும் நீரோடை போல மிதந்து வந்தது.
"இன்னைக்கு வெறும் துகையல் மட்டும்தான்..already டைம் ஆயிடுச்சு" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு சமையல் அறையில் இருந்த ஜன்னலைத் திறந்தான்.
முதல் மாடியில் வீட்டின் பின்புறத்தை நோக்கி அந்த ஜன்னல் திறக்க அங்கிருந்த விரிந்த புல்வெளிகளில் நடை பழகிக் கொண்டிருந்த மாலை நேரக் காற்று மெதுவாக உள்ளே நுழைந்து கொஞ்சம் ஆச்சரியத்துடன் பார்த்தது. ஒரு தனிக்கட்டை இருக்கும் வீடு போலவா இருக்கிறது என்று வியப்புடன் சமையல் அறையை நோட்டம் விட்டு விட்டு முன் அறைக்குள் நுழைந்தது.
அந்த சுத்தமான சிறிய ஹாலில் ஒரு மூலையில் இருந்த மேஜை மீது சில புத்தகங்களும், அலமாரியில் இருந்த பிள்ளையார் படத்துக்கு முன் முத்துப் போல சுடர் விட்டு எரிந்து கொண்டிருந்த தீபமும், ஓரமாக இருந்த சிறிய பீரோவின் அருகில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்த படுக்கையும் சங்கரின் இயல்பை சொல்லாமலேயே நமக்குத் தெரியப்படுத்தும்.
வாசல் கதவு "டக் டக்" என்று லேசாக தட்டப்படும் சத்தம் கேட்டு "ஹாய் ப்ரின்சஸ்... இதோ வரேன்...." என்றபடி வேட்டியை மடித்துக் கொண்டு வேகமாக போய்க் கதவைத் திறக்கவும்...
"மாமா... "என்றபடி ஒரு குட்டிப் புயல் அவன் மீது பாயவும் சரியாக இருந்தது.
"என்னடா கவிதாக்குட்டி.. இன்னைக்கு ஜோரா டிரஸ் செஞ்சுக்கிட்டு இருக்காளே" என்று கொஞ்சியபடி அந்த நாலு வயது குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே நகர, பின்னாலேயே "ஏய்.. கவிதா.. மாமா இப்பத்தான் ஆபீஸ்ல இருந்து வந்திருக்கார். அதுக்குள்ளே தொந்தரவு செய்யக் கூடாது" என்றபடி மாடிப்படியில் ஏறி வந்த உமா உள்ளே நுழைந்தாள்.
"என்ன அக்கா.. எனக்கு என்ன தொந்தரவு ? அதுவும் இல்லாம இந்த வீட்டு இளவரசியைத் தடுக்க எந்த ராஜா ராணிக்கும் உரிமை இல்லை. தெரியுமா?" என்று சிரித்தபடி சங்கர் சொன்னதைக் கேட்டு "அதிகமா செல்லம் கொடுக்கக் கூடாது அப்படின்னு கவிதா அப்பா சொன்னது உங்களுக்கும் சேர்த்துதான்" என்றாள் உமா.
"அப்படின்னா முதலில் அவரை சரியா இருக்கச் சொல்லுங்க.. அவர் எனக்கு அதிகமா செல்லம் கொடுத்து இப்படி வச்சிருக்கறதால இப்ப என்னை அதட்டவே அவருக்கு ரைட்ஸ் இல்லாம போச்சு"
கீழேயிருந்து "உமா.." என்று பலவீனமாக ஒரு குரல் கேட்டது. வாசல் அழைப்பு மணியின் ஓசையும் கேட்கவே "அடடா.. அவர் வந்துவிட்டார். அப்பா வேற கூப்பிடுகிறார். கவிதா.. வாடா கண்ணு.. அப்புறமா வந்து மாமா கூட விளையாடலாம்" என்று உமா கூப்பிட " நான் மாமா கூட சமத்தா இருக்கேன். நீ போய் அப்பாவுக்கு கரகர காப்பி கொடு" என்று கவிதா கொஞ்சியது.
"என்னது கரகர காப்பியா ? " என்று சங்கர் கேட்க "அது வேற ஒண்ணுமில்லை. அவர் ஹிந்திலே கரம் கரம் அப்படின்னு சொல்லுவதை இவள் இப்படி கிண்டல் பண்றா"
"சரி.. சரி.. கவிதா இங்கேயே இருக்கட்டும். நீங்க போய் வேலையைக் கவனிங்க. நான் அப்புறமா கொண்டு வந்து விடுகிறேன்"
உமா படியிறங்கிப் போக கவிதா சமையல் அறையை நோக்கி விரலை நீட்டினாள்.
"என்னடா குட்டி.. மம்மு வேணுமா?'
"அய்யோ மாமா.. மம்முன்னு சொல்லக் கூடாது. சாதம்னு சொல்லணும். நீங்க என்னை விட குட்டி பாப்பா மாதிரி பேசறீங்க"
சங்கர் சிரித்தபடி கவிதாவைத் தூக்கிக் கொண்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்.
குக்கரில் வெயிட்டை போட்டுவிட்டு பார்த்தபோது கவிதாவின் கண்கள் ஜன்னலுக்கு வெளியே தொடுவானத்தை நோக்கி விரிந்திருந்தன.
"மாமா.. இந்த புல்வெளிக்கு எல்லாம் பின்னாடி என்ன இருக்கு ?"
சங்கரின் நினைவுகள் வேகமாக பின்னோக்கி பாய ஆரம்பித்தன. இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த கிராமமும் இல்லாத டவுனும் இல்லாத ஊரின் வங்கிக் கிளைக்கு மாற்றல் கிடைத்து அவன் வந்தபோது சரியான தங்கும் இடமும் சாப்பாடும் இல்லாமல் சில நாள் அவதிப்பட்டு உடம்பு சரியில்லாமல் போனபோது அந்த ஊரின் பெயர் ஓரளவு பிரபலமாக காரணமாக இருந்த ஒரு டாக்டரின் கிளினிக்கில்தான் மூர்த்தியை சந்தித்தான்.
மூர்த்தி பக்கத்து டவுனில் ஒரு ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் விற்கும் கடை வைத்திருந்தான். அவன் சொந்த ஊர் என்பதால் இங்கேயே தங்கிக் கொண்டு போய் வந்து கொண்டிருந்தான். ஓரளவு நிம்மதியான வாழ்க்கை. அவனுடைய அப்பாவுக்கு மட்டும் ரத்தத்தில் ஏதோ கோளாறு என்பதால் நல்ல டாக்டர் இருக்கும் இடத்தை விட்டு நகர அவனுக்கும் மனமில்லை.
அவன் மனைவி உமா வீட்டையும், மாமனாரையும், அப்போது இரண்டு வயது குழந்தையான உமாவையும் தனியாக பார்த்துக் கொண்டு கொஞ்சம் சிரமப்பட்டுக் கொண்டுதான் இருந்தாள்.
மூர்த்தியையும், உமாவையும் பார்த்தபோது அவர்களுக்கு இவ்வளவு சிறிய குழந்தை இருக்கக் கூடும் என்று சங்கருக்குத் தோன்றவில்லை. மூர்த்தி நாற்பதின் பின்பாதியிலும், உமா முன்பாதியிலும் இருந்தார்கள். தாமதாமாகப் பிறந்த குழந்தை என்பதால் கவிதாவுக்கு கொஞ்சம் செல்லம் அதிகம்தான்.
சங்கரின் அமைதியான தோற்றமும், பேச்சும் அவர்களுக்குப் பிடித்துப் போக அவர்கள் வீட்டின் மாடியில் பூட்டிக் கிடந்த இரு அறைகளையும் அவனுக்கு வாடகைக்குக் கொடுத்தார்கள். ஊரிலிருந்த வந்து சங்கரின் அம்மா ஒரு வாரம் அவனுக்கு வேண்டியவற்றைச் செய்து கொடுத்து விட்டு "உனக்கு அக்கா மாதிரி இந்த பொண்ணு கிடைச்சிருக்கு. எனக்கு ஒரு பாரம் விட்டது. அங்கே உன் அண்ணாவும் அண்ணியும் வேலைக்குப் போய்க்கிட்டு குழந்தைகளோட தனியா கஷ்டப் பட்டுகிட்டு இருப்பாங்க. நான் கிளம்பறேன்" என்று சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
குடி வந்த அன்றைக்கு மாடிக்கு வந்த கவிதாகுட்டி சிரித்துக் கொண்டே சங்கரின் மீது தாவியது. அன்று தொடங்கிய இந்த பந்தம்... இதோ தினமும் அவன் ஆபீஸ் விட்டு வந்ததும் அவள் வந்துவிட ராத்திரி தூங்கப் போகும் வரை அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டே திரியும் குழந்தை...
இந்த தினசரி நடைமுறையில் கொஞ்ச காலமாக ஒரு புதிய வழக்கம் உருவாகி இருந்தது.
சங்கரின் சமையலறை ஜன்னலுக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்ற புல்வெளிகள்.
தூரத்தில் அது வானமுகட்டைத் தொடும் விளிம்பில் தெரியும் தென்னை, பனை மர வரிசைகள்..
மாலை நேரத்தில் தங்கத் தகடாய் ஜொலிக்கும் சூரியன் மெள்ள மெள்ள கீழிறங்க.. பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு
கல்யாணத்துக்கு கிளம்பும் குட்டி தேவதைகள் போல பளபளவென மின்னிக் கொண்டு நகரும் மேகங்கள்...
கவிதாவும் சங்கரும் தங்களை மறந்து தினமும் அதைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் கவிதாவிடம் இருந்து வரும் ஒரே கேள்வி இதுதான்..
"மாமா.. இந்த புல்வெளிக்கு எல்லாம் பின்னாடி என்ன இருக்கு ?
(தொடரும்)
"சதுரகிரி மலையோரம்
சாஞ்சிருக்கும் திருகுக் கள்ளி
திருகுக் கள்ளிப் பாலெடுக்க
திரிஞ்சேனடி சில காலம்"
கிராமத்தின் குரல்தான் எத்தனை இனிமையானது. ஜன்னலின் வழியே நுழைந்து இதயத்தை வருடிக் கொண்டு போன இசையை ரசித்தபடி சங்கர் மிக்ஸியில் துருவிய கேரட்டைப் போட்டு அரைக்க ஆரம்பித்தான்.
"மாமா.. இந்த புல்வெளிக்கு எல்லாம் பின்னாடி என்ன இருக்கு ?"
கவிதாவின் இந்தக் கேள்வி மட்டும் தினமும் மாறாமல் இருந்தது. ஆனால் இதற்கான பதில்கள் மட்டும் ஒவ்வொரு நாளும்
சங்கரின் கற்பனையில் புதிது புதிதாக உதயமாகிக் கொண்டே இருந்தன.
"ஏய் கவிதாக் குட்டி.. இந்த பெரிய்ய்ய்ய புல்வெளிக்கு பின்னாலே ஒரு பெரிய மலை இருக்கு. அந்த மலை உச்சியிலே முன்னாடி ஒரு ராஜா இருந்தார். அவரோட அரண்மனை ப்ளம் கேக்குல செஞ்சது. அதுல வாசல் கதவு எல்லாம் வேபர் பிஸ்கட். ஒவ்வொரு ரூமிலும் சுவர் எல்லாம் அழகழகா ஜெம்ஸ் பதிச்சிருப்பாங்க.
தோட்டத்து மரத்துல எல்லா பப்பர்மிண்ட்டும் காய்ச்சு தொங்கும். வேர்க்கடலை மாதிரி செடியோட வேர்ல எல்லாம் சாக்லேட் கிடைக்கும்.
அங்கே இருக்கற ஒவ்வொரு பௌண்டன்லேயும் கோலா, ஸ்குவாஷ், கிரஷ் எல்லாம் வரும்"
"மாமா.. ஆரஞ்சு கிரச்ஷ்ஷ¤.. எனக்கு ரொம்ம்பப் புடிக்கும்"
"ஆமாமா.. ஆரஞ்சு கிரஷ் தனியா ஒரு குழாயிலே எப்பவும் வந்துகிட்டே இருக்கும்"
கவிதாவின் கண்களில் கனவு குடியேற ஜன்னலுக்கு வெளியே தெரிந்த பரந்த புல்வெளியைப் பார்த்த வண்ணம்
"மாமா.. எனக்கு தருவாங்களா?"
"அட என் ராஜாக்குட்டி... அந்த ராஜா அப்பவே இந்த அரண்மனை கவிதாக் குட்டிக்கும் மட்டும்தான் அப்படின்னு
சொல்லிட்டாராம். அதனாலே ஜில் ஜில் ஆரஞ்ச் ஜூஸ்.... பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"
என்றபடி சங்கர் சாத்துக்குடியைப் பிழிந்து சர்க்கரை அதிகம் போடாமல் வடிகட்டி கொஞ்சமாக எடுத்து ஸ்பூனால் கவிதாவின்
வாய்க்குள் கொடுத்தான்.
"மாமா.. ஒரு நாள் அங்கே போய்ப் பார்க்கணும்"
"போகலாம் செல்லம். இப்போ சமத்தா அம்மா கொடுக்கற பப்பு மம்மு சாப்பிடணும். இன்னைக்கு மாமா லேட்டா வந்துட்டேன்.
அதனாலே பப்பு இல்ல.. இந்த தொகையல்.. ஊஊஊஊ... ரொம்ப காரம்.. கவிதாவுக்கு ஒறைக்கும்"
"அய்யோ மாமா.. சேப்பு காரட் ஒறைக்காது. திதிச்சும்"
" இதோ பாரு மொளகா... உர்ர்ர்ர்..."
கவிதா இறங்கி ஓட.. சங்கர் ஒரு மிளகாயைத் துப்பாக்கி போல பிடித்துக் கொண்டு அவள் பின்னால் ஓடினான்.
"என்ன இந்தியா பாகிஸ்தான் சண்டையா ?" என்றபடி மூர்த்தி உள்ளே நுழைந்தார்.
"அப்பா.. மாமா காரட் ஒறைக்கும்னு தப்பு தப்பா சொல்றார்" என்று கவிதா முதல் குற்றச்சாட்டை தாக்கல் செய்தாள்.
"என்னது.. 14 காரட்டா.. 22 காரட்டா" என்று சிரித்தபடி அவளைத் தூக்கிக் கொண்ட மூர்த்தி "கீழே அம்மா கூப்பிடறா.. பாரு" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வந்த உமா "வாடி இங்கே.. "என்று அவளை வாங்கிக் கொண்டு கீழே இறங்கினாள்.
"இன்னைக்கு வயலுக்குப் பின்னாலே என்ன என்ன எல்லாம் இருந்துச்சு ? " என்று மூர்த்தி சிரிக்க..
"இன்னைக்கு பெரிய அரண்மனைக்கு நம்ம கவிதா சொந்தக்காரி ஆயிட்டா" என்று சங்கர் பதிலுக்கு சிரித்தான்.
"ம்ம்.. இவளுக்கு தினம் ஒரு கதை சொல்லி சொல்லி நீ பெரிய எழுத்தாளன் ஆயிடப் போறே"
"உக்காருங்க பாவா" என்று சங்கர் சொல்ல மூர்த்தி "இல்லேப்பா.. டாக்டர் சொன்ன மருந்து ஒண்ணு இங்கேயும் கிடைக்கல. என் கடை பக்கத்திலும் இல்லை. அதுதான் நம்ம ராகவன் நேத்து பட்டணம் போனபோது சொல்லியிருந்தேன். வாங்கிட்டு வந்திருப்பாரு." என்றார். கீழே தாத்தா இருமும் சத்தம் கேட்டது.
மாட்டு வண்டி போன கிராமத்து மண்பாதையின் சக்கரத் தடங்கள் போல சங்கரின் நெற்றியில் சுருக்கங்கள் தோன்றின.
"பாவா.. டாக்டர் என்ன சொல்றாரு ?"
"கவலைப் பட வேண்டாம் அப்படின்னுதான் சொல்றாரு. ஆனா என்னவோ மனக்குள்ளே புரியாத பயம் தோணுது.. சங்கர்"
"பயப்படாதீங்க பாவா.. கடவுள் இருக்காரு. ஒண்ணும் ஆகாது"
"சரிப்பா.. நான் கிளம்பறேன். நீ சாப்பிடு"
அன்று இரவு சமையல் அறையின் ஜன்னல் அருகில் நின்றபடி நட்சத்திர வெளிச்சத்தில் இளங்காற்று தலைதடவிக் கொண்டிருந்த புல்வெளியைப் பார்த்தபடி சங்கர் நின்று கொண்டிருந்தான். இருட்டில் வெகு தூரத்தில் தெரிந்த மரவரிசைகளும், வெளிர் சாம்பல் நிறத்தில் திருநீறு பூசிக்கொண்டிருந்த வானமும், கண்ணுக்குப் புலப்படாத கடவுள் போல மறைந்திருக்கும் இரவுப் பூச்சிகளின் ரீங்காரமும், எங்கிருந்தோ மெதுவாக ஒலித்துக் கொண்டிருந்த பேர் தெரியாத பறவையின் சோக கீதமும் அவனைப் பாதிக்கவில்லை. அவன் மனம் அவன் வசம் இல்லை.
ஒரு மெல்லிய குளிர் அவனைத் தொட்டுக்கொண்டு போனது. சங்கரின் உடல் சிலிர்த்தது.
அவன் ஜன்னலை மூடினான்.
( பயணம் இன்னும் தொடரும்)

