அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி
மல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,
ஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.
வாரண மாயிரம் சூழ வலம்செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
நாளை வதுவை மணமென்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்,ஓர்
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந் தென்னை மகட்பேசி மந்திரித்து,
மந்திரக் கோடி யுடுத்தி மணமாலை,
அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெதிர் கொள்ள,
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான்.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.
வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளிறன்னான் என் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழீநான்.
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மை யுடையவன் நாராயணன் நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான்.
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென்னை முன்னே நிறுத்தி,
அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவனோடும் உடன் சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே.

