மதிவாணன் நல்ல மனிதன்தான். கோயம்புத்தூரில் இருந்து லாரியில் லோடு ஏற்றிக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றிவிட்டு வாரம் ஒரு முறை வந்து போய்க்கொண்டு இருந்தாலும் எந்த கெட்ட பழக்கத்தையும் கற்றுக் கொள்ளவில்லை.
மேகலையைக் கல்யாணம் செய்து கொண்டபோது அவள் கழுத்தில் ஒரு பவுன் தாலி வாங்கிக் கட்டினான். கீரையன்பாளையத்திலே அவன் சொந்த நிலத்திலே ஒரு ஓட்டு வீடு இருந்தது. அவர்கள் சொர்க்கம் அங்கே இருந்ததாக மேகலை நினைத்தாள். அது கேரளத்தில் எல்லை என்பதால் மழையின் தாக்கம் எப்போதுமே அதிகமாக இருக்கும்.
கீரையன்பாளையம் ஆனைமலைக்கு போகும் வழியில் மலையின் மேலேயே ஒரு மேட்டுப் பிரதேசத்தில் இருந்தது. எப்போதும் மேகக் கூட்டங்கள் திரண்டு திரையிட்டுக் கொண்டிருக்கும். மேகலை பிறந்து வளர்ந்தது எல்லாமே காரைக்குடி பக்கம் ஒரு வறண்ட பூமியில்.. அதனால் அவளுடைய உலகம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு உச்சியில் நிலையாகிப் போனது. ஆனால் எல்லாமே ஒரு மழைக்கால ராத்திரியில் மாறிப்போனது.
அந்த வருஷம் நல்ல மழை. விடாமல் பெய்து கொண்டே இருந்தது. மேகலைக்கு உதவி செய்ய வந்திருந்த சின்னம்மா ஊருக்குப் போய்விட்டதால் நிறைமாத கர்ப்பிணியான அவள் யாரும் இல்லாமல் தனியாக இருந்தாள். வாசலில் மழையின் ஆரவாரத்தோடு வேறு மனிதர்களின் குரல்களும் கேட்டன. மெதுவாக எழுந்து வாசலுக்கு வந்தவளுக்கு அடிவயிறு கலங்குவது போல நாலைந்து பேர்களாக மதியைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.
"கடவுளே ! அவருக்கு என்னங்க ஆச்சு ?" "பதறாதேம்மா.. உயிருக்கு ஆபத்தில்ல.. நாலு நாள் முன்னால ஒரு விபத்து நடந்து போச்சு. காலிலே நல்ல அடி. எலும்பு முறிஞ்சு போச்சு. கட்டு போட்டு அழைச்சுகிட்டு வந்துட்டோம்" என்று ஒருவர் சொல்ல "பயப்படாதே மேகலை.. எனக்கு ஒண்ணும் இல்ல" என்று மதி சிரிக்க முயற்சி செய்தான்.
ஆனால் அந்த சிகிச்சைக்கு எல்லாம் எந்த பலனும் இல்லாமல் அவள் பிரசவத்தின்போதே அவனுக்குப் புரையோடிய காலை எடுத்து விட வேண்டிய நிலைமை வந்தது. லாரி ஓனர் நல்லவர்தான். ஆனாலும் அவரால் எவ்வளவு பணம் தர முடியும் ? கையில் கழுத்தில் இருந்த சொற்ப நகைகளும் போனபிறகு அவர் கொடுத்தது மருந்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சரியாய்ப் போனது. கையில் கம்புடன் தடுமாறி நடக்க மதிவாணன் பழகிக் கொள்ள ஆரம்பித்தான். மேகலை சுமக்க ஆரம்பித்தாள். வீட்டைச் சுற்றி காய்கறி செடி வளர்த்து அதைப் பறித்து சந்தைக்குக் கொண்டு போய் விற்று வந்தாள்.
தினமும் அவர்களுக்கு இருந்த ஒரே சந்தோஷம் அந்த சின்ன மழலையின் ஓசைதான். ஆனால்..
அன்று மேகலை வீட்டுக்கு வந்தபோது.. "மேகலை.. குழந்தைக்கு உடம்பு அனலாக் கொதிக்குது. வூட்டுல எந்த மருந்தும் இல்ல. வைத்தியர் கிட்ட போயிட்டு வர்ரேன்." என்று சொன்னபடி மதி கம்பை ஊன்றி எழுந்தான்
"நீங்க உக்காருங்க. நான் கொழந்தைய எடுத்துக்கிட்டு போயிட்டு வர்ரேன். உங்களால அந்த கல்லுப் பாதையில நடக்க ஏலாது" என்றபடி மேகலை கிளம்பினாள்.
வானம் கருக்க ஆரம்பித்தது.
No comments:
Post a Comment