நூற்றெட்டு வைணவ திவ்ய தேசங்கள்
எவரொருவர் எம்பெருமானிடம் சரணாகதி அடைந்து தம்மை முழுமையாக சமர்ப்பிக்கின்றாரோ அவருக்கே வைணவத்துவம் சித்திக்கின்றது.
சர்வம் விஷ்ணு மயம் ஜகத் எனும் வாக்கிற்கு இணங்க உலகமே பகவானின் சரீரமாகி அவனே அதன் ஆன்மாவாகி விளங்குகிறான்.
உலகைக் காத்திட திருவுள்ளம் கொண்ட எம்பெருமான் பரம், வ்யூகம், விபவம், அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம் என ஐந்து வடிவங்களில் தரிசனம் தருகின்றார்.
1.திருபரமபதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி எனும் மூவருடன் எழுந்தருளி நித்ய சூரிகள் புடைசூழ ஆனந்தக் காட்டி தருவது பரம் எனப்படும்.
2. திருப்பாற்கடலில் திருமகளும், மண்மகளும் திருவடி வருட யோக நித்திரை செய்து அறிதுயிலமர்ந்த நிலையே வியூகம் எனப்படும்.
3. விபவம் என்றால் இறங்குதல் என்று பொருள். தசாவதரங்கள் கொண்டு உலகை உய்விக்க வந்தமையே விபவம் எனப்படும்.
4. ஒவ்வொரு ஜீவனுக்கும் உள்ளே இருந்து அதைத் தாங்கி நிற்கும் நிலையே அந்தர்யாமித்வம் ஆகும்.
5. சாதாரண மானிடர்களுக்கு அரிதான பரம் முதலானவற்றிலிருந்து வேறுபட்டு யாவரும் வழிபடும் வகையில் தங்கம், வெள்ளி, மரம், கல், சாளக்கிராமம் எனும் பொருட்களில் உருவமாய் எழுந்தருளி தரிசனம் தருவதே அர்ச்சாவதாரமாகும்.
இப்பூவுலகில் உள்ளோர்க்கு அர்ச்சாவதாரமே எம்பெருமானை அடையும் எளிய வழியாகும்.
செய்ய பரத்துவமாய் சீரார் வியூகமாய்
துய்ய விபவமாய்த் தோன்றியிவற்றுள் - எய்துமவர்க்கு
இந்நிலத்தில் அர்ச்சாவதாரம் எளிதென்றான்
பன்னு தமிழ் மாறன் பயின்று, - மணவாள மாமுனிகள்
இங்ஙனம் இவ்வுலகில் அதுவும் நமது பாரதத்தில் தானே உருவானதாகவோ (ஸ்வயம் வியக்த ஸ்தலங்கள் ), ரிஷிகளாலோ, மன்னர்களாலோ, அடியார்களாலோ பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வரக்கூடிய ஸ்தலங்களுக்கு ஆழ்வார்களின் பாசுரம் சூட்டப்பட்டதென்றால் அந்த தலத்தின் பெருமாள் மங்களாசாசனம் செய்யப்பட்டவராக கருதப் படுகிறார். அந்தத் தலம் திவ்யதேசம் எனப்படுகிறது.
சிவபெருமான் உறைந்த தலங்களில் தேவாரம் பாடப் பெற்றிருந்தால் அவை பாடல் பெற்ற தலங்கள் என்று அழைக்கப்படுவது போல ஆழ்வார்களின் பாசுரங்களால் அழகு கூட்டப்பெறும் திருமாலின் திருத்தலங்கள் திவ்யதேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
ஆயிரமாயிரம் வைணவத் திருத்தலங்களில் சிறப்பான திவ்யதேசங்களாகக் கருதப்படுபவை நூற்றெட்டு தலங்களாகும். இனி அவை பற்றி விரிவாகக் காண்போம்,


2 comments:
அருமை. பரம் வியூகம் விளக்கங்கள் எனக்குப் புதிது.
பரம் என்பது சிந்திக்கவே திவ்யமாக இருக்கிறது. தொட்ருங்கள்
Thanks power.. ரொம்ப சந்தோஷம்.. கண்ணனின் அருளால் எல்லா திவ்ய தேசங்களையும் பற்றி நிதானமாக எழுத ஆசை.
Post a Comment